புதிய கேஜெட்டுகள்

ரூ. 20 லட்சம் தானாம்: ஐபோன் டுயோ லிக்விட் மெட்டல் அறிமுகம்

இந்திய சந்தையில் ஸ்டான்டர்டு ஐபோன் டுயோ விலை ரூ. 2,99,900 முதல் தொடங்குகிறது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 'ஐபோன் டுயோ'வை அறிமுகப்படுத்தியது. இது அந்நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த ஐபோன் மாடல் ஆகும். தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த அதிக விலையை ஜீரணித்துக் கொண்டிருந்த வேளையில், அதன் பிரத்யேக சொகுசு வெர்ஷன் மலைக்க வைக்கும் விலையில் $21,000 (சுமார் ரூ. 20 லட்சம்) வெளியாகியுள்ளது.

சாதாரண ஆப்பிள் ஐபோன் டுயோ சமீபத்தில் இந்திய சந்தையில் ரூ. 2,99,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.4-இன்ச் வெளிப்புறத் திரையில் இருந்து திறந்து 7.6-இன்ச் டேப்லெட் திரையாக மாறும் இதன் பாஸ்போர்ட் பாணி மடிப்பு வடிவமைப்பு, வாடிக்கையாளர்களை ஏற்கெனவே கவர்ந்துள்ளது.

லிக்விட் மெட்டல் ஐபோன் டுயோ:

தற்போது, ​​கேவியர் என்ற உயர்தர கஸ்டம் (Custom) பிராண்ட் , இந்த வடிவமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, ஒரு மிக உயர்தர வகையை உருவாக்கியுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையானது, இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு கோடீஸ்வரர்கள் மற்றும் உயர்மட்ட சேகரிப்பாளர்களுக்காக மட்டுமேயானது என்பதை தெளிவாக காட்டுகிறது.

'லிக்விட் மெட்டல்' என விவரிக்கப்படும் இந்த சாதனம், முழுவதுமாக ஸ்டெர்லிங் வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லிங் வெள்ளியானது, ஒரு சிற்ப புடைப்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு, கண்ணாடி போன்ற பளபளப்புடன் மெருகூட்டப்பட்டுள்ளதாக கேவியர் பிராண்ட் கூறுகிறது. கேவியரின் கூற்றுப்படி, மொத்தமாக 17 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதால், இது ஒரு லிமிட்டெட் எடிஷன் மாடல் ஆகும்.

தடையற்ற உலோக அமைப்பு:

ஆப்பிள் நிறுவனம் சாதாரண ஐபோன் டுயோவை டைட்டானியம் ஃபிரேம் மற்றும் காம்ப்லெக்ஸ் ஹிஞ்ச் அமைப்புடன் வடிவமைத்திருந்தாலும், இந்த ஆடம்பர மாற்றமானது வழக்கமான கூறுகளுக்குப் பதிலாக பிரமிக்க வைக்கும் கஸ்டமைசேஷன்களை கொண்டுள்ளது.

அந்த ஆடம்பர பிராண்டின்படி, ஐபோன் டுயோ மடித்துத் திறக்கும் விதத்தை பார்த்த பிறகே இந்த உத்வேகம் கிடைத்தது. "மடிக்கக்கூடிய ஐபோன் டுயோவில் பொதிந்துள்ள உருமாற்ற கருத்தை இந்த வடிவமைப்பு தொடர்கிறது; இது ஸ்மார்ட்போனை ஒரு தடையற்ற உலோக அமைப்பாக மாற்றுகிறது," என்று கேவியர் கூறியது.

256GB பதிப்பின் விலை $18,840 (இந்திய மதிப்பில் ரூ. 18,08,298), 512GB பதிப்பின் விலை $19,200 (இந்திய மதிப்பில் ரூ. 18,42,851) , மற்றும் 1TB பதிப்பின் விலை $19,910 (இந்திய மதிப்பில் ரூ. 19,10,998) ஆகும். 2TB பதிப்பின் விலை $21,340 (இந்திய மதிப்பில் ரூ. 20,48,252) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT