சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இதுவரை இல்லாத அளவிற்கு தனது மிக விரிவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வரிசையை அறிமுகப்படுத்தியது.
பிரீமியம் மாடல்களான கேலக்ஸி Z போல்டு 8 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி Z பிளிப் 8 உடன், புதிய "பாஸ்போர்ட் அளவு" கொண்ட கேலக்ஸி Z போல்டு 8 மாடலையும் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதிகரித்து வரும் உதிரிபாகங்களின் விலை மற்றும் தீவிரமடைந்து வரும் போட்டிக்கு மத்தியில் தனது முதன்மை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலைகளையும் சாம்சங் நிறுவனம் கணிசமாக உயர்த்தியுள்ளது.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய கேலக்ஸி Z போல்டு 8 மாடலை ரூ. 1,79,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம், கேலக்ஸி Z போல்டு 8 அல்ட்ரா விலை ரூ. 1,99,999 என்றும், கேலக்ஸி Z பிளிப் 8 ரூ. 1,24,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் ஆப்பிள் நுழையும் என்றும், இது பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையை மாற்றியமைக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கும் நிலையில், சாம்சங் அதனை எதிர்கொள்ள தயாராகி வரும் வேளையில் இந்த புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி Z சீரிஸ் மாடல்களானது பல்வேறு பயனர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி Z போல்டு 8 மாடலை ஆழ்ந்து ரசிக்கும் உள்ளடக்க நுகர்வுக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய வடிவமைப்பு என்றும், போல்டு 8 அல்ட்ரா பெரிய திரை மற்றும் மேம்பட்ட கேமரா அமைப்புடன் உற்பத்தித்திறனில் கவனம் செலுத்தும் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது என்று சாம்சங் தெரிவித்துள்ளது.
கேலக்ஸி Z பிளிப் 8, அதன் மறுவடிவமைக்கப்பட்ட ஃபிளெக்ஸ்விண்டோ மூலம் எளிதில் எடுத்து செல்லும் வசதி, சுய வெளிப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான ஊடாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக சாம்சங் கூறியுள்ளது.
இந்த மூன்று சாதனங்களும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏ.ஐ. மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், மல்டி-டாஸ்கிங், ஆட்டோமேஷன் மற்றும் பிரத்யேக அனுபவங்களை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு மடிக்கக்கூடிய வடிவத்திற்கும் கேலக்ஸி ஏஐ உகந்ததாக உருவாக்கப்பட்டுள்ளதாக சாம்சங் கூறுகிறது.