ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவற்றின் பற்றாக்குறையால் ஏற்படும் விலை உயர்வு மீண்டும் ஒப்போ ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளது. இம்முறை, நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களான ஒப்போ K14, K14x மற்றும் A6s 5G ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது.
ஒப்போ தவிர பல்வேறு ஸ்மார்ட்போன் பிரான்டுகளும் இந்திய சந்தையில் தங்களது மாடல்களின் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஜப்பான் சந்தையில் தனது ஐபோன் மாடல்கள் விலையை கணிசமாக உயர்த்தியது.
புதிய விலை:
குறிப்பாக, ஒப்போ K14x மாடலின் விலை கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்ட் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி மாடல் விலை, முந்தைய விலையான ரூ. 15,999-இல் இருந்து ரூ. 16,999-ஆக உயர்ந்துள்ளது. இந்த ரூ. 1,000 விலை உயர்வு மற்ற வேரியண்டுகளுக்கும் பொருந்தும்.
அதேவேளையில், ஒப்போ K14-இன் டாப் எண்ட் வேரியண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை அதிகபட்சமாக ரூ. 4,000 உயர்த்தப்பட்டுள்ளது.
ஒப்போவின் சில்லறை விற்பனையாளர்களுடன் பகிரப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன்களுக்கான புதிய விலை உயர்வு நேற்று (ஜூலை 20) முதலே அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட விலைகள் ப்ளிப்கார்ட் இணையதளத்திலும் ஏற்கனமே மாற்றப்பட்டு விட்டன. இருப்பினும், இந்த மாடல்களின் சில வேரியண்டுகள் தற்போது கையிருப்பில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அம்சங்கள்:
ஒப்போ K14 சீரிஸ் மற்றும் A6s 5G ஆகியவை இந்நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களாக தொடர்கின்றன. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன; இது அன்றாட பணிகளை சிறப்பாக கையாளும் திறன் கொண்டது. இவை அனைத்தும் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.75-இன்ச் HD+ LCD திரையைக் கொண்டுள்ளன.
இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 50MP + 2MP டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டுள்ளன. இத்துடன் ஒப்போ K14 மாடலில் 8MP செல்ஃபி கேமராவும், ஒப்போ K14x மற்றும் ஒப்போ A6s 5G ஆகியவற்றில் சற்றே குறைந்த திறன் கொண்ட 5MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளன.
ஒப்போ K14 மாடலில் உள்ள 7,000mAh பேட்டரியுடன் ஒப்பிடுகையில், OPPO K14x மற்றும் A6s 5G ஆகியவை சிறிய அளவிலான 6,500mAh பேட்டரிகளை கொண்டுள்ளன. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கின்றன. மென்பொருளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ColorOS-உடன் வருகின்றன.