கூகுள் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போன் சீரிசை வெளியிட்டது. இதில் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ XL மற்றும் மடிக்கக்கூடிய பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஆகிய மாடல்கள் அடங்கும். இந்த சமீபத்திய சீரிசில், மென்மையான பயன்பாட்டிற்கு உதவும் வகையில் மெல்லிய கேமராக்கள், மேம்பட்ட ஜூம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
"இன்று நாங்கள் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ மற்றும் பிக்சல் 11 ப்ரோ XL ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தினோம். இவை முக்கிய கேமரா அப்டேட்கள், மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் சமீபத்திய ஜெமினி நானோ மாடலில் இயங்கும் எங்களின் அதிவேகமான, மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் கூகுள் டென்சர் ஜி6 உடன் வருகின்றன.
இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள், நேரத்தை சேமிக்கும் தனிப்பட்ட உதவியை வழங்குவதற்காக ஜெமினி இன்டெலிஜென்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், உங்களின் தனித்துவமான பாணியில் அந்த தருணத்தை நீங்கள் சிறப்பாக படம்பிடிக்க உதவும் புதிய கேமரா அனுபவங்களையும் இவை கொண்டுள்ளன," என்று கூகுளின் வலைப்பதிவு ஒன்று தெரிவித்தது.
புதிய பிக்சல் சீரிசில் உள்ள நான்கு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் புதிய டென்சர் ஜி6 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், இவை IP68 தரப் பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட 5x டெலிஃபோட்டோ கேமராக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஜெமினி ஏஐ திறன்களை கொண்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அளவுக்கு பிரபலமாக இல்லாத பட்சத்திலும், கூகுள் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் தொடர்ச்சியாக ஏஐ சார்ந்த அம்சங்களை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
பிக்சல் 10-ஐ விட 40 சதவீதம் மெல்லிய கேமராவுடன், பிக்சல் 11 மாடல்கள் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சம் கொண்டிருக்கிறது. இதன் பின்புறத்தில் 48MP வைடு கேமரா, 13MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 10.8MP 5x டெலிஃபோட்டோ கேமராவும், முன்புறத்தில் 10.5MP செல்ஃபி கேமராவும் உள்ளன.
ஷட்டர் பட்டனை ஒரே ஒரு முறை தட்டுவதன் மூலம் தானாகவே தொடர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கும் 'மேஜிக் கேப்சர்' எனப்படும் புதிய அம்சம் ஒரு மேம்பாடாக வருகிறது. கூகுளின் கூற்றுப்படி, 'இன்ஸ்டன்ட் நைட் சைட்' அம்சம் இருண்ட சூழல்களில் காட்சிகளை வேகமாகப் படம்பிடிக்கிறது, இதனால் பயனர்கள் வெளிச்சத்திற்காக காத்திருக்கும்போது தங்கள் தொலைபேசியை அசைக்காமல் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
புதிய பிக்சல் 11 ஸ்மார்ட்போன் பிஸ்தா, ஹைபிஸ்கஸ், ஃப்ராஸ்ட் மற்றும் அப்சிடியன் ஆகிய வண்ணங்களிலும், பிக்சல் 11 ப்ரோ மற்றும் பிக்சல் 11 ப்ரோ XL ஆகியவை கேன்யன், ஃபாக், ஆலிவ் மற்றும் ஃபுல் மேட் அப்சிடியன் வண்ணத்திலும் கிடைக்கின்றன.
இந்தியாவில் பிக்சல் 11 சீரிஸ் பேஸ் மாடலின் விலை ரூ. 89,999-இல் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் வேரியண்ட் விலை ரூ. 1,04,999 ஆகும்.
இதேபோல் பிக்சல் 11 ப்ரோ பேஸ் மாடலின் விலை ரூ. 1,19,999-இல் இருந்து தொடங்குகிறது, அதே சமயம் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 1,34,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிக்சல் 11 ப்ரோ XL பேஸ் மாடலின் விலை ரூ. 1,34,999 ஆகவும், டாப்-எண்ட் மாடலின் விலை ரூ. 1,49,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.