தொழில்நுட்பம்

எலான் மஸ்க்கின் 'X' நிறுவனத்தில் இருந்து விலகிய PRODUCT CHIEF நிகிதா பியர்!

முழு நேரத் தயாரிப்புத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும், X நிறுவனத்தின் மூலோபாய ஆலோசகராக அவர் தொடர்ந்து செயல்படுவார்.

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான பிரபல சமூக வலைதள நிறுவனமான 'X' தயாரிப்புப் பிரிவு தலைவராக பணியாற்றி வந்த தொழிலதிபர் நிகிதா பியர், பொறுப்பேற்ற ஒரு ஆண்டிலேயே தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ பதிவு:

"X சமூகத்திற்குச் சேவை செய்தது எனது வாழ்நாளின் மிகப்பெரிய பாக்கியம். வரலாற்று சிறப்புமிக்க தகவல் தொடர்புத் தொழில்நுட்பமாக X எப்போதும் நிலைத்து நிற்கும். ஆனால் இந்த செயலியை பராமரித்து இயக்குவது 24 மணி நேரமும் இடைவிடாது செய்யவேண்டிய பணியாக உள்ளது. எனவே தற்போது நான் ஒரு சிறிய இடைவெளி எடுக்க வேண்டிய நேரமிது," என அவர் தெரிவித்துள்ளார். முழு நேரத் தயாரிப்புத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும், X நிறுவனத்தின் மூலோபாய ஆலோசகராக அவர் தொடர்ந்து செயல்படுவார்.

ஓராண்டு சாதனைகள்:

2025 ஜூலை மாதம் இந்த பொறுப்பை ஏற்ற நிகிதா பியர், தனது ஓராண்டு பதவிக் காலத்தில் அடைந்த முக்கிய இலக்குகளைப் பட்டியலிட்டுள்ளார். தனது தலைமையின்கீழ் சுமார் '30 புதிய தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டு அம்சங்கள் X செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பயனர்களின் வருகை மற்றும் தளத்தின் பயன்பாட்டு அளவீடுகளில் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் X தளம் 70 இடங்கள் முன்னேறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யார் இந்த நிகிதா பியர்?

நிகிதா பியர் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். டீனேஜர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'tbh' மற்றும் 'Gas' ஆகிய சமூக வலைதள செயலிகளை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய 'tbh' செயலியை 2017-ல் மெட்டா நிறுவனமும், 'Gas' செயலியை 2023-ல் டிஸ்கார்ட் நிறுவனமும் விலைக்கு வாங்கின. பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்த இவர், தற்போது லைட்ச்பீட் நிறுவனத்தில் வென்ச்சர் பார்ட்னராகவும் பணியாற்றி வருகிறார்.