விளையாட்டு

மீண்டும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பதாக வினேஷ் போகத் குற்றச்சாட்டு - சம்மேளனம் விளக்கம்

ஏற்கனவே பெடரேஷன் கோப்பை போட்டியின் போது கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி தன்னை வெளியேற்றியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய ஓபன் ரேங்கிங் தொடருக்கான ஏப்ரல் 30-ம் தேதி வரை கால அவகாசம் இருந்தும் முன்பே இணையதளம் மூடப்பட்டுவிட்டதாக வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.

மே 10-12 தேதிகளில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுக்குச் செல்ல இதுவே கடைசி வாய்ப்பாகும். இதில் பதக்கம் வெல்பவர்களே National Campஇல் இணைய முடியும்.

இந்நிலையில் தான் மீண்டும் மல்யுத்தப் போட்டிக்கு வருவதைத் தடுக்க தேசிய மல்யுத்த சம்மேளன அதிகாரிகள் (WFI) அதிகாரிகள் திட்டமிட்டுச் செயல்படுவதாகவும், தனது அழைப்புகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பெடரேஷன் கோப்பை போட்டியின் போது கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி தன்னை வெளியேற்றியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங், "மற்ற சில வீரர்களுக்கும் இது போன்ற பதிவுச் சிக்கல்கள் வந்தன, அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டதும் அவை சரிசெய்யப்பட்டன. நாங்கள் யாரையும் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுக்கவில்லை.

இதுபோல சர்ச்சையை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வினேஷ் போகத்

31 வயதான வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் உடல் எடை காரணமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஓய்வை அறிவித்தார்.

பின்னர் அரசியலில் நுழைந்த அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், மல்யுத்தத்தின் மீதான காதலால் 2026-ல் மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுத் தீவிரமாகத் தயாராகி வருகிறார்.

தேசிய மல்யுத்த சம்மேளனத்தில் பாஜக தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தலைவராக இருந்தபோது பல வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாவும், புகார் அளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வினேஷ் போகத், பஜ்ரங் புன்யா உள்ளிட்ட வீரர்கள் கடந்த 2023 சுமார் 6 மாத காலம் டெல்லியில் நடத்திய போராட்டம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீண்ட போராட்டத்தின் பின் பிரிஜ் பூஷன் சிங் பதவிநீக்கம் செய்யப்பட்டார். சம்மேளனம் கலைக்கப்பட்டு பின்னர் இடைவெளிக்கு பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் பிரிஜ் பூஷன் மீதான கிரிமினல் வழக்கு இன்னும் எந்த நடவடிக்கையும் இன்றி நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.