விளையாட்டு

சென்னையில் நாளை முதல் உலக இளைஞர் டேபிள் டென்னிஸ் போட்டி: 13 நாடுகளில் இருந்து 334 பேர் பங்கேற்பு

தமிழகத்தில் இருந்து 36 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் உலக இளைஞர் யூத் கன்டென்டா், பீடர் சீரிஸ் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டி நாளை (23-ந் தேதி) முதல் நவம்பர் 1-ந்தேதி வரை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.

13 நாடுகள்

இதில் 13 நாடுகளை சோ்ந்த 334 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கன்டென்டா் பிரிவில் 210 பேரும், பீடா் தொடரில் 124 பேரும் களம் காண்கிறார்கள். தமிழகத்தில் இருந்து 36 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியா சார்பில் மூத்த வீரா் சத்யன், அபினந்த் பிரதிவாதி, திவ்யான்ஷி பௌமிக், தியா சிட்லே, மனுஷ் ஷா, யஷஸ்வனி கோபா்டே, சுதிா்தா முகா்ஜி, தனிஷா கோட்டேசே, பிரியாஞ்ச் பட்டாச்சாா்யா, ஹாசினி மதன்ராஜ், அனன்யா முரளிதரன், காவ்யா பட், ரித்விக் குப்தா, சத்யா அஸ்பதி போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

12 பிரிவுகள்

இந்த போட்டி 19, 17, 15, 13, 11 வயதுகளில் சிறுவர், சிறுமியருக்கு ஒற்றையர் பிரிவுகளில் நடைபெறுகிறது. கலப்பு இரட்டையரில் 19 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடக்கிறது. மொத்தம் 12 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.

நவம்பர் 21 முதல் 28 வரை துருக்கியின் இஸ்தான்புலில் நடைபெறும் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய ஜூனியா் வீரா்களுக்கு இந்த போட்டி உதவியாக அமையும்.

இளைஞர் கன்டென்டர் பிரிவு ஆட்டங்கள் 23 முதல் 26-ந் தேதி வரையும், பீடா் தொடர் 28 முதல் நவம்பர் 1 வரையும், 30-ந் தேதி நாக் அவுட் சுற்றும், 1-ந்தேதி இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT