விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து: நாளை சவுதி அரேபியாவுடன் மோதும் ஸ்பெயின்

முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி தனது அடுத்த ஆட்டத்தில் சவுதி அரேபியாவுடன் மோதுகிறது.

உலகக் கோப்பை கால்பந்தில் வெற்றிக் கணக்கை தொடங்கும் உத்வேகத்துடன் ஸ்பெயின் அணி நாளை சவுதி அரேபியாவுடன் மோதுகிறது.

உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் ஸ்பெயின் தனது முதல் ஆட்டத்தில் (எச் பிரிவு) அறிமுக அணியான கேப்வெர்டேவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திண்டாடியது.

இலக்கை நோக்கி அடித்த அத்தனை ஷாட்டுகளையும் கேப்வெர்டே கோல் கீப்பர் வோசின்யா தகர்த்தெறிந்தார். இதனால் ஆட்டம் கோலின்றி (0-0) 'டிரா'வில் முடிந்தது. நடப்பு தொடரில் கோல் ஏதும் அடிக்கப்படாத ஒரே ஆட்டம் இது தான்.

இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி தனது அடுத்த ஆட்டத்தில் சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 9.30 மணிக்கு அட்லாண்டாவில் நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் ஸ்பெயின் களம் காணுகிறது. ரோட்ரி, பெட்ரி, பெரன் டோரஸ், மைக்கேல் ஒயர்ஜபால், 'இளம் புயல்' லாமின் யமால் ஒருசேர மிரட்டினால் கோல் கணக்கை தொடங்கலாம். முதல் ஆட்டத்தில் ஏமாற்றிய 18 வயதான யமால் இந்த முறை முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதே போல் தனது முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் உருகுவேயுடன் 1-1 என்ற கணக்கில் 'டிரா' செய்த தரவரிசையில் 61-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவையும் குறைத்து மதிப்பிட முடியாது.

கோல் கீப்பர் முகமது அல் ஒவைஸ், கேப்ட னும், முன்கள வீரருமான சலிம் அல் டாவ்சாரி, சாத் அப்துல் ஹாமித் உள்ளிட்டோர் பலம் சேர்க்கிறார்கள். இவர்களின் சிறந்த செயல்பாட்டை பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இவ்விரு அணிகளும் இதுவரை மோதிய 3 ஆட்டங்களி லும் ஸ்பெயினே வெற்றி கண்டுள்ளது.

'இ' பிரிவில் அங்கம் வகிக்கும் 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் புதுமுக அணியான கியூராசாவை நொறுக்கியது. நிமிச்சா, காய் ஹாவர்ட்ஸ், ஜமால் முசியாலா என நட்சத்திர வீரர்கள் கோலடித்தனர்.

ஜெர்மனி அணி தனது அடுத்த லீக்கில் ஐவரிகோஸ்டை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு டொராண்டோ நகரில் அரங்கேறுகிறது. ஐவரி கோஸ்ட் அணி ஏற்கனவே 1-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை பதம் பார்த்து 3 புள்ளிகளை பெற்றுள்ளது. அதனால் இவ்விரு அணிகளும் 2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ளன.

சர்வதேச கால்பந்தில் ஜெர்மனி - ஐவரிகோஸ்ட் இதற்கு முன்பு ஒரு முறை சந்தித்துள்ளன. 2009-ம் ஆண்டு நடந்த அந்த நட்புறவு ஆட்டம் 1-1 என்று சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.