23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது மற்றும் 3-வது சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி உள்பட 40 அணிகள் நடையை கட்டின.
நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் மொராக்கோ (ஆப்பிரிக்கா), அர்ஜென்டினா (தென் அமெரிக்கா) தவிர மற்ற எல்லா அணிகளும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவையாகும்.
இந்தநிலையில் கால்யிறுதி சுற்று நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு போஸ்டனில் நடக்கும் முதலாவது கால்இறுதியில் 2 முறை சாம்பியனான தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி, 7-ம் நிலை அணியான மொராக்கோவுடன் கோதாவில் குதிக்கிறது.
பிரான்ஸ் கேப்டன எம்பாப்பே- மொராக்கோ வீரர் அச்ரப் ஹாகிமி பிரான்ஸ் அணி லீக்கில் செனகல், ஈராக், நார்வேயையும், 2-வது சுற்றில் சுவீடனையும், 3-வது ரவுண்டில் பராகுவேயையும் போட் டுத்தாக்கியது. கேப்டன் கிலியன் எம்பாப்பே (7 கோல்), டெம்பிளே, மைக்கேல் ஒலிசே ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். உலகக் கோப்பைக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 10 அணிகளில் மொராக்கோ மட்டுமே மிஞ்சி நிற்கிறது.
தோல்வியே சந்திக் காமல் வீறுநடை போடும் மொராக்கோ 2-வது சுற்றில் நெதர்லாந்தையும், 3-வது ரவுண்டில் கனடாவையும் விரட்டியது. அந்த அணியில் இஸ்மாயில் சாய்பேரி. அச்ரப் ஹாகிமி, ரஹிமி உள்ளிட்டோர் அசத்துகிறார்கள். முரட்டுகாளை போல் சீறிப்பாயும் மொராக்கோ வீரர்கள் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இதே பிரான்சிடம் தோற்றதற்கு, தற்போது வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க காத்திருப்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இவ்விரு அணிகள் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டம் டிரா ஆனது.