பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.
10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி), 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம் பியன் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் முதலாவது அரை இறுதியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, 2018-ம் ஆண்டு சாம்பியனான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.
லீக்கில் பாகிஸ்தானை 55 ரன்னில் சுருட்டியது ஆகச்சிறந்த செயல்பா டாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா (ஒரு சதம் உள்பட 152 ரன்), ஷபாலி வர்மாவும், (104 ரன்), பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா (8 விக்கெட்) ஸ்ரீசரனி (7), பிரேமா ரவாத் தும் (5) மிரட்டுகிறார்கள். மிடில் வரிசை தான் சற்று தடுமாறுகிறது. பிரதிகா ரவால், பார்தி புல்மாலி, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஆகியோரும் கைகொடுத்தால் இந்தியா மேலும் வலுவடையும்.
நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி லீக்கில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. இந்தோனேசியா, அமீரகம் ஆகிய அணிகளை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது. பந்து வீச்சில் மருமா அக்தர் (7 விக்கெட்), ரபேயா கான், நஹிதா அக்தரும், பேட்டிங்கில் சோபனா மோஸ்டாரி, ஷர்மின் அக்தர், ஷோர்னா அக்தரும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர்.
சுல்தானா கூறுகையில், 'இந்தியா மிகவும் வலிமையான அணி. அதனால் எங்களது மிக உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளோம். முடிவு எதுவாக இருந்தாலும் சரி. எங்களது முழு திறமையை வெளிப்படுத்தி, திட்டமிடலை களத்தில் கச்சிதமாக செயல்படுத்த விரும்புகிறோம்' என்றார்.
வரலாற்றை புரட்டிப்பார்த்தால் இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் அண்மை காலமாக வங்காளதேசம், இந்தியாவுக்கு எதிராக பகைமை உணர்வை காட்டுவதால் வரிந்துகட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி யுள்ளன. இதில் 21-ல் இந்தியாவும், 3-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
வெப்பம் மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் நிலவும் இங்குள்ள சூழலில் ரன் குவிப்பது சவாலாக உள் ளது. அத்துடன் ஆடுகளம் மிகவும் மெதுவாக காணப்படுவதால், சுழற்பந்து வீச்சாளர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். பந்து முட்டிக்கு மேல் எழும்புவதே பெரிய விஷயமாக தெரிகிறது.
அதனால் தான் பெரும்பாலான பேட்டர்கள் தகிடுதத்தம் போடுகிறார்கள். 100 ரன்களுக்கு மேலான ஸ்கோரை 'சேசிங்' செய்வதே கடினமாகி விடுகிறது. எனவே 140-150 ரன்கள் எடுத்தாலே அது வெற்றிக்குரிய பாதுகாப்பான ஸ்கோராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு தொடரில் இதுவரை நடந்துள்ள 12 ஆட்டங்களில் 8-ல் முதலில் பேட் செய்த அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.