ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 19 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. அபிஷேக் சர்மா 28 பந்தில் 61 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), திலக் வர்மா 22 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. ஹசன் நவாஸ் 51 பந்தில் 96 ரன் (5 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றிருந்தது. தற்போது மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்று சாதித்துள்ளது.
பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஜப்பான் வந்ததில் இருந்து பலத்த மழை பெய்தது. எங்களால் ஒரு வாரத்துக்கு பயிற்சியே மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் வீரர்கள் தங்களை தயார் செய்து கொண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது.
நாங்கள் எதையும் குறையாக கூறவில்லை. சாம்பியன் அணிக்கான அடையாளம் இதுதான். இந்தியா ஒரு சாம்பியன் அணி என்பது எங்களது செயல்பாட்டில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் விளையாடும்போது அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டி இருக்கும். அதன்படி வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியதை நாம் பார்த்தோம். கூட்டு முயற்சியால் நாங்கள் தங்கப் பதக்கத்தை வென்று சாதித்தோம்.
அபிஷேக் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இறுதிக் கட்டத்தில் திலக் வர்மா நன்றாக ஆடினார். வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நேர்த்தியா பந்து வீசினார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.