விளையாட்டு

video-டெல்லி மேடையில் விராட் கோலி-கரண் அவ்ஜ்லா 'Bromance': இணையத்தைக் கலக்கும் வைரல் காட்சிகள்!

கரண் அவ்ஜ்லாவின் மிகப்பெரிய ரசிகன் நான் என விராட் கோலி கூறினார்.

டெல்லியில் உள்ள துவாரகா யஷோபூமி கன்வென்ஷன் மையத்தில் நேற்று விராட் கோலி-யின் 'One8' பிராண்ட் நடத்திய பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும், இசைக்கலைஞராகவும் பஞ்சாபி பாப் நட்சத்திரம் கரண் அவ்ஜ்லா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, மேடைக்கு பின்னால் கரண் அவ்ஜ்லா திடீரென வந்து விராட் கோலியை ஆச்சரியப்படுத்தினார். இருவரும் கைகுலுக்கி, இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்ட வீடியோவை 'One8' நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், இருவரும் கருப்பு நிற உடையில் உரையாடும் புகைப்படத்தை கரண் அவ்ஜ்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Low Flame' என்ற தனது புதிய பின்னணி இசையுடன் பகிர்ந்துள்ளார். ரசிகர்களால் இது "ஆண்டின் மிகச்சிறந்த கூட்டணி" என அழைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியின் போது கரண் அவ்ஜ்லா தனது புகழ்பெற்ற பாடல்களான 'Wavy', 'MF Gabhru' போன்றவற்றை பாடினார். குறிப்பாக அவர் 'Winning Speech' என்ற பாடலை பாடிய போது, விராட் கோலியை மேடைக்கு அழைத்தார். கோலி அந்தப் பாடலின் துள்ளல் இசைக்கு மேடையில் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர் மேடையில் பேசிய விராட் கோலி,

கரண் அவ்ஜ்லாவின் மிகப்பெரிய ரசிகன் நான் என கூறினார். பின்னர், "நீங்கள் பாடல்களை இதயத்தில் இருந்து எழுதுகிறீர்கள். உங்களது 'Winning Speech' பாடல் எனது வாழ்க்கையோடு மிகவும் ஒத்துப்போகிறது. நீங்களும் உங்களது சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டீர்கள், நானும் மிக இளம் வயதிலேயே என் தந்தையை இழந்தேன்.

அதனால் இந்த பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு முன்பு இந்த பாடலை அடிக்கடி கேட்பதை வழக்கமாக வைத்துள்ளேன்." என நெகிழ்ச்சியாக கூறினார்.

விளையாட்டுத் துறையின் மாபெரும் நாயகனும், இசைத்துறையின் முன்னணி நட்சத்திரமும் இணைந்து டான்ஸ் ஆடிய இந்த வீடியோக்கள் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் மில்லியன்கணக்கான பார்வைகளைப் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இந்த விழாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தாவும் கலந்துகொண்டு ரேம்ப் வாக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.