விளையாட்டு

"நான் சாக வேண்டும் என்று மல்யுத்த சம்மேளனம் விரும்புகிறது" - வினேஷ் போகத் பரபரப்பு பேட்டி

நான் தோற்றபோது சம்மேளன அதிகாரிகள் கொண்டாடினர்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் போட்டியிட விரும்பினார்.

ஆனால், 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க இந்திய மல்யுத்த சம்மேளனம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்று வினேஷ் போகத் முறையிட்டார். உச்சநீதிமன்றம் ஆசிய போட்டிக்கான தகுதிச் சுற்று தொடரில் பங்கேற்க அனுமதி அளித்தது.

அதனடிப்படையில் வினேஷ் போகத் பங்கேற்று விளையாடி வருகிறார். முதல் சுற்றில் ஜோதியை 7-1 என எளிதாக வீழ்த்தினார். அதன்பின் காலிறுதியில் நிஷு உடன் மோதினார். இதில் நிஷு கடும் சவாலாக விளங்கினார். இதில் 7-6 என வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.

அரையிறுதியில் மீனாட்சியை எதிர்கொண்டார். இதில் 4-6 என போகத் தோல்வியடைந்தார். இதனால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ், "நான் தோற்றுவிடவில்லை. நான் ஒற்றையாளாக ஒட்டுமொத்த மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராகப் போராடினேன்.

நான் தோற்றபோது சம்மேளன அதிகாரிகள் கொண்டாடினர். அவர்கள் தற்பொழுது கொண்டாடட்டும். நான் மிகவும் பிடிவாதமானவள், இந்த பின்னடைவுகள் எனது இலக்கை இன்னும் வலுவாக்கும்.

நான் மீண்டும் களமிறங்கி, எனது செயல்திறன் மூலம் விமர்சகர்களின் வாயை அடைப்பேன். தற்பொழுது நான் விரைவில் சாக வேண்டும் என்று கூட்டமைப்பு நினைக்கிறது" என்று காட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2023 இல் மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்பி பிரிஜ் பூஷன் பல வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 6 மாத காலம் போராடினர். இதன் பின்னரே பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வினேஷ் முக்கிய பங்கு வகித்தார்.

பிரிஜ் பூஷனால் பாலியல் தொல்லைக்கு உள்ளான 6 பெண்களில் தானும் ஒருத்தி என அண்மையில் வினேஷ் போகத் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.