வித்யா ராம்ராஜ்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜிக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகை: முதலமைச்சர் விஜய்

பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

முதலமைச்சர் விஜய் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், தடகளத்தில் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம்

அவரது மகத்தான சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஷால் மற்றும் ராஜேஷ்

ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தடகள வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும்.

எதிர்காலத்திலும் இத்தடகள வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!

இவ்வாறு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

வித்யா ராம்ராஜ்

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த கிரண், பூவம்மா மச்சேத்திரா, பிராச்சி, வித்யா ராம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் 9 நாடுகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய வீராங்கனைகள் 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றனர்.

பஹ்ரைன் வீராங்கனைகள் 3:30.21 நிமிடங்களில் கடந்து வெள்ளிக் பதக்கம் வென்றனர். சீனா வீராங்கனைகள் 3:31.02 நிமிடங்களில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

3 பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜ்

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இடம் பிடித்திருந்தார். இவர் ஏற்கனவே 400மீ தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். அத்துடன் பி.டி. உஷாவின் 42 வருட சாதனையை முறியடித்தார்.

4X400 கலப்பு பிரிவில் வித்யா ராம்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது தங்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டில் மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT