விளையாட்டு

VIDEO- ஜெயிலர் 2 பாடலுக்கு நடனமாடும் ஏஐ வீடியோ: மீண்டும் 'பாலிவுட் டேவ்' அவதாரம் எடுத்த டேவிட் வார்னர்!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பலரும் அவரது இந்த கலகலப்பான பதிவிற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படப் பாடலுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் டேவிட் வார்னர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், மைதானத்தில் தனது அபாரமான பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் தனது நகைச்சுவையான பதிவுகள் மற்றும் நடன வீடியோக்கள் மூலம் சர்வதேச அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்திய சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்விக்கும் வழக்கத்தை கொண்டுள்ள அவர், தற்போது மீண்டும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் பாடலுக்கு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நடன வீடியோ ஒன்றிற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் 'அல போலேலோ' என்ற பாடலுக்கு டேவிட் வார்னர் ஆடுவது போன்று ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுபதிவு செய்த டேவிட் வார்னர், "பாலிவுட் டேவ் தனது அபாரமான நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்" என்ற பாணியில் நகைச்சுவையாக குறிப்பிட்டு தனது நடனத் திறமையைப் பற்றி கருத்து தெரிவிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ரசிகர்களின் கருத்து

டேவிட் வார்னரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பலரும் அவரது இந்த கலகலப்பான பதிவிற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக தென்னிந்திய ரசிகர்கள் பலர், வார்னரின் இந்திய சினிமா மீதான காதலைப் பாராட்டி, அவரைத் தென்னிந்தியத் திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்து மீம்ஸ்களையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய சினிமா மீதான ஆர்வம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வழியே தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பாடல்களுக்குத் தனது குடும்பத்தினருடன் நடனமாடி பதிவிடத் தொடங்கிய வார்னர், இந்திய ரசிகர்களிடையே செல்லமாக 'பாலிவுட் டேவ்' என்றும் அழைக்கப்படுகிறார். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே பல தென்னிந்திய மற்றும் இந்தித் திரைப்பட நடிகர்களின் தோற்றங்களில் தன்னைப் பொருத்தி வீடியோக்களை வெளியிட்டு வந்த வார்னர், தற்போது ஜெயிலர் 2 வீடியோ மூலம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT