விளையாட்டு

எலிமினேட்டர் சுற்று: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி - ஹைதராபாத்திற்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்!

இப்போட்டியில் தோற்கும் அணி தொடரைவிட்டு வெளியேறும்.

ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் சுற்றில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பஞ்சாபில் மோதிவருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் அடித்தது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக 29 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி 97 ரன்கள் அடித்தார். இதில் 12 சிக்ஸ்ர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். மேலும் இப்போட்டி மூலம் கிறிஸ் கெயிலின் நீண்டகால சாதனையையும் வைபவ் முறியடித்துள்ளார்.

அதாவது ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். நடப்பு சீசனில் 65 சிக்ஸர்கள் சூர்யவன்ஷி அடித்துள்ளார். இதற்கு முன்பு 2012-ல் கிறிஸ் கெயில் அடித்த 59 சிக்ஸர்களும், 2019-ல் கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரஷல் அடித்த 52 சிக்சர்களுமே அதிகமாக இருந்தது.

தொடர்ந்து த்ருவ் ஜுரேல் அரைசதம் விளாசினார். ஹைதராபாத் தரப்பில் பிரஃபுல் 3 விக்கெட்டுகளும், இஷான் மலிங்கா, சிவாங் குமார் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து 244 ரன்களை இலக்காக கொண்டு ஹைதராபாத் அணி பேட்டிங் செய்யவுள்ளது.

இப்போட்டியில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றிப்பெறும் அணி தகுதிச்சுற்று 1-ல் தோற்ற குஜராத்தை தகுதிசுற்று-2ல் எதிர்கொள்ளும்.