விளையாட்டு

வைபவுக்கு வயசு கம்மி.. ஆனா பக்குவம் நிறைந்தவர்..!- ராஜஸ்தான் கோச் சங்ககாரா

ஆண்டுகள் செல்லச் செல்ல அவர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்.

வைபவுக்கு வயது 15 தான், ஆனால் மிகவும் முதிர்ச்சியானவர் என குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தகுதிச்சுற்று 2 போட்டியில் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநரும் தலைமைப் பயிற்சியாளருமான குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 2வது தகுதிச்சுற்றில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது.

வாழ்வா சாவா என்ற இந்த மோதலில் ராஜஸ்தான் சார்பில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சதம் எதிர்பார்த்த சூர்யவன்ஷிக்கு ஏமாற்றம் அளித்தாலும், அவரது பவர்ஃபுல்லான ஆட்டத்தை கண்டு மூத்த வீரர்களும் வியந்தனர்.

இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைமைப் பயிற்சியாளர் கூறியதாவது:-

சூர்யவன்ஷி அற்புதமாக பேட் செய்தார். அவரைச் சுற்றி விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்ததால், அது மிகவும் கடினமான ஒரு பேட்டிங் இன்னிங்ஸாக இருந்தது.

ஆனாலும், அந்த பதற்றத்தை வெளிக் காட்டாமல் தற்காத்துக்கொள்ளக்கூடிய ஸ்கோரை எட்ட வைத்தார். வைபவ்வுக்கு 15 வயதுதான், ஆனால் அவர் மிகவும் பக்குவமானவர். அவர் ஆட்டத்தை மிக நன்றாகப் புரிந்துகொண்டு விளையாடுகிறார். சூழ்நிலைகளை நன்கு கணிக்கிறார். மேலும் அவருக்கு எந்த பயமும் இல்லை.

இந்த சீசனில் அவர் ஆடிய விதத்தைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் தொடர்ந்து இதே வேகத்தில், அதே முனைப்புடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் முன்னேறிக் கொண்டே இருப்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்.

ஆண்டுகள் செல்லச் செல்ல அவர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.