விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட்: நாளை பலப்பரீட்சை நடத்தும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள்!

மதுரை பாந்தர்ஸ் இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக திகழ்கிறது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சேப்பாக்க சூப்பர் கில்லீஸ்

4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தில் உள்ளது.

அந்த அணி முதல் போட்டியில் நெல்லையிடம் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் திருப்பூரிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது போட்டியில் திண்டுக்கல்லை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது போட்டியில் மதுரை பாந்தர்சை நாளை (14-ந்தேதி) எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ஜெகதீசன்

மதுரை அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மதுரை பாந்தர்ஸ் இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக திகழ்கிறது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

கேப்டன் என்.ஜெகதீசன் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 4 போட்டியில் 2 அரை சதத்துடன் 222 ரன்கள் எடுத்து இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். சராசரி 74.00 ஆகும்.

ஸ்டிரைக் ரேட் 173.43 ஆகும். பந்து வீச்சாளர்களில் சிலம்பரசன், விக்னேஷ் தலா 5 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

மதுரை பாந்தர்ஸ்

அனிருத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் தான் மோதிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்–டன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேலம் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. திண்டுக்கல் 2- வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

இன்றைய போட்டிகள் இன்று நடைபெறும் முதல் போட்டியில் கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் (மாலை 3.30) அணிகள் மோதுகின்றன.கோவை 2-வது வெற்றி ஆர்வத்திலும், நெல்லை 3-வது வெற்றி வேட்கையிலும் உள்ளன.

இரவு 7.30 மணிக்கு நடக்கும் 2-வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. திருச்சி 3-வது வெற்றி ஆர்வத்திலும், திருப்பூர் 4-வது வெற்றி வேட்கையிலும் உள்ளன.