உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1962-ம் ஆண்டுக்கு பிறகு பட்டத்தை தக்கவைக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் இறுதி சுற்றில் களம் புகுந்த அர்ஜென்டினாவின் முயற்சிக்கு ஸ்பெயின் கூடுதல் நேரத்தில் கோல் போட்டு முட்டுக்கட்டை போட்டது.
தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்த அர்ஜென்டினா அணியில் மெஸ்சி உள்ளிட்ட ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்றவர்களும், பயிற்சி குழுவினரும் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் நேற்று தாயகம் திரும்பினர்.
வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி பஸ்சில் அந்த நாட்டு கால்பந்து சம்மேளன அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உருக்கமான பதிவு வெளியிட்டார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது. இந்த காயம் ஆறுவதற்கு சில காலமாகும். இந்த நேரத்தில் சில நல்ல விஷயங்களை நினைவில் கொள்கிறேன். முழு அர்ப்பணிப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீண்டெழுந்த அந்த ஆட்டங்கள் என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.
ஒட்டுமொத்த தேசத்தின் ஆதரவுடன் கடின உழைப்பு, தீவிர முயற்சியால் மீண்டும் ஒரு முறை எங்களை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக வெளிப்படுத்தியுள்ளோம். நாங்கள் படைத்துள்ள சாதனைகளை இப்போது முழுமையாக பாராட்டுவது கடினம் என்றாலும், தொடர்ந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதை குறிப்பிட வேண்டும்.
உங்களது ஒவ்வொரு வாழ்த்துக்கும். ஒவ்வொரு செய்திக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாடாக மீண்டும் ஒன்றிணைந்து அர்ஜென்டினராக இருப்பதில் உள்ள அளப்பரிய பெருமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டோம்.
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகள்' என அதில் கூறியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பையில் 8 கோல்கள் அடித்த 39 வயதான லயோனல் மெஸ்சி, சர்வதேச போட்டியில் தனது எதிர்காலம் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.