கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்து காலிறுதி, அரையிறுதி சுற்று போட்டிகளும் முடிவடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்தினர்.
டை-பிரேக்கர்:
விம்பிள்டன் 2026 இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வரேவை நான்கு செட்களில் வீழ்த்தி ஜானிக் சின்னர் தனது பட்டத்தை தக்கவைத்து கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் சின்னர் 6-7, 7-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மிக நீண்ட நேரம் நீடித்த முதல் செட்டில், ஸ்வரேவ் 'டை-பிரேக்கர்' முறையில் 9-7 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். எனினும், சின்னர் மீண்டு வந்து இரண்டாவது செட்டை 'டை-பிரேக்கர்' (7-2) மூலம் கைப்பற்றினார்.
இரண்டாவது முறை:
போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது மூன்றாவது செட் என்று கூறலாம்; இந்த செட்டின்போது ஸ்வரேவின் முழங்காலில் காயம் ஏற்படும் சூழல் உருவானது. ஸ்வரேவின் சர்வீஸை முறியடித்த சின்னர், மூன்றாவது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார்.
நான்காவது செட்டிலும் ஜெர்மானிய வீரரான ஸ்வரேவின் சர்வீஸை மீண்டும் முறியடித்த இத்தாலிய வீரர் சின்னர், 6-4 என்ற கணக்கில் செட்டை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார்.