டென்னிஸ்

Italy Open டென்னிஸ்: மெத்வதேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சின்னர்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று நேற்று நடந்தது. இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷியாவின் மெத்வதேவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக மெத்வதேவ் 2வது செட்டை 7-5 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் 4-2 என சின்னர் முன்னிலை பெற்றார். அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நிற்காததால் ஆட்டம் மறுநாள் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் 3வது செட்டை சின்னர் 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், கேஸ்பர் ரூட் உடன் மோதுகிறார்.