டென்னிஸ்

விம்பிள்டன் பட்டத்தை தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்: லிண்டா நோஸ்கோவா உருக்கம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று, காலிறுதி சுற்று, அரையிறுதி சுற்று போட்டிகள் முடிவடைந்தன.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, சக நாட்டு வீராங்கனையான கரோலினா முசோவா உடன் மோதினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய லிண்டா நோஸ்கோவா முதல் செட்டை 6-2 என வென்றார். இதற்கு பதிலடியாக இரண்டாவது செட்டை 7-5 என கரோலினா முசோவா போராடி கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை லிண்டா நோஸ்கோவா 6-3 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா நோஸ்கோவாவுக்கு 46 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற கரோலினா முசோவாவுக்கு 23 கோடி ரூபாய் கிடைத்தது.

இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற லிண்டா நோஸ்கோவா, தன் தாய்க்கு கண்ணீருடன் இந்த வெற்றியை சமர்ப்பித்தார்.

எனது அம்மா இல்லை என்றால் நான் இங்கு நின்றிருக்க முடியாது என உருக்கமாகப் பேசிய லிண்டா நோஸ்கோவா, பிரிட்டிஷ் கிராண்ட் ஸ்லாம் தனது தாயாருக்கு மிகவும் பிடித்தமான போட்டி. ஆல் இங்கிலாந்து கிளப்பின் புல்வெளியில் கோப்பையை உயர்த்துவதை காண்பதே மிகப்பெரிய கனவுகளில் ஒன்று எனவும் தெரிவித்தார்.

லிண்டா நோஸ்கோவாவின் தாயார் இவானா நோஸ்கோவா நீண்ட கால புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு 2024, ஜூலையில் விம்பிள்டன் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.