களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷியாவின் ரூப்லெவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து பெற்ற தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்றவர்கள் வரிசையில் 32வது வெற்றியை சின்னர் நேற்று பதிவு செய்தார். இதன்மூலம் ஜோகோவிச்சின் 31 வெற்றி என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டில் ஜோகோவிச் தொடர்ச்சியாக 31 வெற்றிகளைப் பெற்றிருந்தார்.
ஜானிக் சின்னர் இத்தாலி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.