இரண்டாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ், நேற்று (வெள்ளிக்கிழமை) ஜேக்கப் மென்சிக்கை நான்கு செட்களில் வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். இதன் மூலம் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நீண்டகாலமாக எதிர்பார்த்த தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் தருவாயில் உள்ளார்.
ஜகுப் மென்சிக்கிற்கு எதிராக 7-5, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மன் வீரரான ஸ்வரேவ் ஞாயிற்றுக்கிழமை அன்று 10-ஆம் நிலை வீரரான ஃபிளாவியோ கோபோலி அல்லது சக இத்தாலிய வீரரான மேட்டியோ அர்னால்டியை எதிர்கொள்வார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரோலண்ட் கரோஸில் கார்லோஸ் அல்கராஸுக்கு எதிரான தோல்வி உட்பட, இதற்கு முன்பு மூன்று இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்று, முக்கியப் போட்டிகளில் பலமுறை வெற்றியை நெருங்கியுள்ளார் ஸ்வரேவ்.
"இது ஒரு கிராண்ட்ஸ்லாம், இது ஐந்து செட்கள் கொண்ட தொடர், பல விஷயங்கள் நடக்கும், எதிராளிகள் சிறப்பாக விளையாடுவார்கள். நான் அதைச் சமாளித்தேன். ஞாயிற்றுக்கிழமை அன்று மற்றொரு சிறந்த போட்டியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்," என்று ஸ்வெரெவ் கூறினார்.
29 வயதான அவர், இதற்கு முந்தைய இரண்டு கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டிகளில், 2024-இல் பாரிஸில் அல்கராஸை எதிர்கொண்டபோதும், 2020 அமெரிக்க ஓபன் தொடரில் டொமினிக் தீமுக்கு எதிராக இரண்டு செட் முன்னிலையைத் தவறவிட்டபோதும், வெற்றிக்கு ஒரு செட் தொலைவில் இருந்தார்.