அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதி சுற்றில் போராடி தோல்வி அடைந்தார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 7-6 (7-5) என வென்றார். இதற்கு பதிலடியாக ஆடிய பென் ஷெல்டன் அடுத்த இரு செட்களை 6-1, 6-3 என கைப்பற்றினார்.
இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 4வது செட்டை 6-1 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டிலும் அல்காரஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனாலும் அதிரடியாக ஆடிய பென் ஷெல்டன் 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபேவை சந்திக்கிறார்.