விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: டெகத்லானில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் - சாதனை படைத்தார் தேஜஸ்வின் சங்கர்

முன்னதாக கிளாஸ்கோ போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் இருந்து விலக வேண்டியிருந்தது.

2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் டெகத்லான் (பத்து வகையான தடகளப் போட்டிகள் கொண்ட கூட்டுப் போட்டி) பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை தேஜஸ்வின் சங்கர் படைத்தார்; அவர் இதில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சவாலான 10-பிரிவு போட்டியில் தேஜஸ்வின் மொத்தம் 7976 புள்ளிகளை பெற்றார். 'பேட்டெல்லார் டெண்டினிடிஸ்' (patellar tendinitis) எனப்படும் நாள்பட்ட முழங்கால் தசைநார் அழற்சி பாதிப்பு இருந்தபோதிலும் அவர் இந்த போட்டியில் பங்கேற்றார்; இதே பாதிப்பு காரணமாகவே அவர் முன்னதாக கிளாஸ்கோ போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் இருந்து விலக வேண்டியிருந்தது.

உயரம் தாண்டும் போட்டியில் தனது முதல் முயற்சிக்கு பிறகு, நீண்டகாலமாக இருந்த அந்த பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததால் போட்டியில் இருந்து விலக நேரிட்டபோது, ​​தேஜஸ்வின் மிகுந்த மனவேதனையுடன் கண்ணீர் விட்டார்.

பர்மிங்காமில் நடைபெற்ற 2022 காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற பிறகு, இது அவருக்குக் கிடைத்த இரண்டாவது காமன்வெல்த் பதக்கமாகும். இவரது பெயரில் உள்ள தேசிய சாதனை 8057 புள்ளிகளாகும்.

ஆசிய விளையாட்டு போட்டி:

27 வயதான இவர், 2023 ஹாங்சூ ஆசிய விளையாட்டு போட்டிகளில் டெகத்லான் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் வென்றவர். முதல் நாள் முடிவில் ஐந்து போட்டிகளுக்கு பிறகு, கனடாவின் டேமியன் வார்னருக்கு அடுத்தபடியாக (இரண்டாவது இடத்தில்) இவர் இருந்தார்; வார்னர் இறுதியில் 8036 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை வென்றார்.

ஒன்பதாவது போட்டியான ஈட்டி எறிதலுக்கு பிறகு தேஜஸ்வின் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்; கடைசி போட்டியான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்ததன் மூலம் அந்த இடத்தை தக்கவைத்துக்கொண்டார். கிரெனடாவை சேர்ந்த, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லிண்டன் விக்டர் 8096 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தை வென்றார்.