அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி பகல்- இரவாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
டேவிட் மலான் 80 ரன்னும், கேப்டன் ஜோரூட் 67 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயன் 3 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
237 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 13 ரன்னில் அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் 21 ரன்னும், மைக்கேல் நீசர் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.
இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா திணறியது. 55 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.
மைக்கேல் நீசர் 3 ரன்னில் ஆன்டர்சன் பந்திலும், ஹாரிஸ் 23 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்திலும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 6 ரன்னில் ராபின்சன் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
2-வது இன்னிங்சில் திணறினாலும் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருக்கிறது.
இதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கே வெற்றிவாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே முதல் டெஸ்டில் அந்த அணி வெற்றிபெற்று இருந்தது.