மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) நீண்ட நாட்கள் இருப்பது சோர்வை ஏற்படுத்தும் என்று கூறி ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக, ஆஸ்திரேலிய அணிக்கு 20 ஓவர் உலக கோப்பையை வென்றுத்தந்த கேப்டன் ஆரோன் பிஞ்ச் கொல்கத்தா அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். ஐ.பி.எல். ஏலத்தின் போது விலைபோகாத பிஞ்ச் இனி ரூ.1½ கோடி ஊதியம் பெறுவார். 35 வயதான பிஞ்ச் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இணையும் 9-வது அணி இதுவாகும்.
ஏற்கனவே அவர் ராஜஸ்தான், டெல்லி, ஐதராபாத், மும்பை, பஞ்சாப், பெங்களூரு மற்றும் புனே வாரியர்ஸ், குஜராத் லயன்ஸ் (இவ்விரு அணிகளும் இப்போது கிடையாது) ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 9 அணிகளுக்காக ஆடிய முதல் வீரர் என்ற அரிய பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 85 ஆட்டங்களில் விளையாடி 2,005 ரன்கள் எடுத்துள்ளார்.