தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்க புரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி என்ற பளுதூக்கும் வீரர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரது பெற்றோர் முத்துப்பாண்டி- பேச்சியம்மாள். இந்த தம்பதியின் இளைய மகனான ராஜா முத்துப்பாண்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ராஜா வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளதால் அவரது குடும்பத்தினர் மற்றும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜாவின் தந்தை முத்துப்பாண்டி சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.
அவரது தாயார் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அண்ணன் சுரேஷ்குமாரும் பளுதூக்கும் வீரர் ஆவார். இவர் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள ராஜா, அவருடைய சகோதரர் சுரேஷ் குமார் இருவரும் தொடக்கத்தில் கபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்திய நிலையில், உடலை பராமரிக்க வேண்டும், உடல் வலிமை பெற வேண்டும் என்பதற்காக சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஜிம்மில் பயிற்சி பெற சென்றுள்ளனர்.
இவர்கள் ஜிம்மில் காட்டும் ஆர்வத்தை பார்த்து அங்குள்ள பயிற்சியாளர்கள் இருவரையும் பளுதூக்கும் விளையாட்டிற்கு தயார் செய்துள்ளனர். வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்க, அவருக்கு மயிலாடுதுறையில் உள்ள சாய் விளையாட்டு விடுதியில் இடம் கிடைத்து.
அங்கு பயிற்சி பெற்று மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க பெரம்பூர் ரெயில்வேயில் அவருக்கு பணி கிடைத்தது.
2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார். 2022-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உடல்நிலை பாதிப்பு காரணமாக பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.