விளையாட்டு

டி20 கிரிக்கெட்: ராய்ப்பூரில் இன்று மோதும் இந்தியா-ஜிம்பாப்வே பெண்கள் அணி

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் சமீபத்தில் விலகினார்.

இந்தியா- ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

பெண்கள் கிரிக்கெட்

ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி களில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா ஜிம்பாப்வே இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இவ்விரு பெண்கள் அணிகள் இரு நாட்டு தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும். இந்த மைதானத்தில் பெண்கள் சர்வதேச போட்டி நடப்பதும் முதல் தடவையாகும்.

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டார். மந்தனா முழு நேர கேப்டனாக பொறுப்பை ஏற்ற பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டில் கலக்கிய மந்தனாவும், ஷபாலி வர்மாவும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார்கள். 37 வயதான ஹர் மன்பிரீத் கவுர் ஒரு வீராங்கனையாக தொடருகிறார்.

ஜெமிமா ரோட் ரிக்ஸ் காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் 3-வது வரிசைக்கு பொருத்தமான பேட்டர் இல்லாமல் இந்தியா தடுமாறுகிறது. அந்த வரிசையில் அனுஷ்கா ஷர்மா அல்லது நிக்கி பிரசாத் ஆகியோரில் ஒருவர் ஆடுவார்கள் என தெரிகிறது.

பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, ஸ்ரீசரனி, நந்தினி ஷர்மா மிரட்டுவார்கள். கேப்டன்ஷிப்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் மந்தனா இன்னொரு மைல்கல்லை எட்டும் நிலையில் இருக்கிறார். அவர் இன்னும் 133 ரன்கள் எடுத்தால், சர்வதேச பெண்கள் 20 ஓவர் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை தொடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெறுவார்.

ஜிம்பாப்வே எப்படி?

ஜிம்பாப்வே பெண்கள் அணி, 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்னும் கத்துக்குட்டி தான். இந்த ஆண்டில் விளையாடியுள்ள 18 இருபது ஓவர் ஆட்டங்களில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை. அதனால் அவர்கள் 20 ஓவர் முழுமையாக தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கும்.

ஜிம்பாப்வே கேப்டன் ஜோஸ்பின் என்கோமா கூறுகையில்,"கடந்த மாதம் ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை முதல்முறையாக வென்றோம். உலகின் சிறந்த பெண்கள் அணிகளில் ஒன்றான வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது எங்களது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

அதே நம்பிக்கையுடன் இந்திய தொடரை எதிர்கொள்வோம். இந்தியா போன்ற அணிக்கு எதிராக அதுவும் அவர்களது இடத்தில் விளையாடுவது எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும்.

இந்த வாய்ப்பை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம். இந்த தொடரில் இருந்து நிறைய கற்றுக் கொண்டு அதை தாயகம் எடுத்துச் சென்று இளம் வீராங்கனைகளுக்கு ஊக்கமளிப்போம் என நம்புகிறேன்" என்றார்.

இரவு 7 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மந்தனா (கேப்டன்), ஷபாலி வர்மா, அனுஷ்கா ஷர்மா அல்லது நிக்கி பிரசாத், ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், பார்தி புல்மாலி, தீப்தி ஷர்மா, பிரேமா ரவாத், ஸ்ரீசரனி, நந்தனி ஷர்மா, கிரந்தி கவுட்.

ஜிம்பாப்வே:

கெல்லிஸ் என்ட்லோவு, பிலவ்ட் பிசா, சிபோ முகெரி திரிபனோ, சிட்ஜா துருரு, கிறிஸ்டின் முடாசா, ஜிவான்ஜூரா, ஜோஸ்பின் என்கோமா (கேப்டன்), மோடஸ்டர் முபாசிக்வா, லோரின் பிரி, குட் ஜாய் சிகோரா, நோம்விலோ சிபாண்டா.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய் கிறது.

SCROLL FOR NEXT