விளையாட்டு

உச்சநீதிமன்றம் அனுமதி- ஆசிய விளையாட்டுத் தகுதிச் சுற்றில் வினேஷ் போகட் பங்கேற்பு!

தகுதித்தேர்வில் பங்கேற்க வினேஷ் போகத்தை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் வரவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்தது.

விளையாட்டு மற்றும் நீதியின் நலனைக் கருத்தில் கொண்டு வினேஷ் போகத்திற்கு இந்த வாய்ப்பை வழங்குவது மிக அவசியம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

கடந்த மே 18 அன்று தனி நீதிபதி ஒருவர் வினேஷ் போகத் தகுதிச் சுற்றில் பங்கேற்கக் கோரிய இடைக்கால மனுவைத் தள்ளுபடி செய்திருந்தார். அதனை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்த வழக்கில், தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது இந்தச் சாதகமான தீர்ப்பை வழங்கியது.

ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரிசீலித்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

ஆனால், தகுதித்தேர்வில் பங்கேற்க வினேஷ் போகத்தை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின்படி, இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) வரும் மே 30 மற்றும் 31-ந்தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ள தகுதிச் சுற்றுத் தேர்வுகளில் வினேஷ் போகத் நேரடியாகப் இன்று பங்கேற்றார்.

அதன்படி, இன்று கோண்டா நகரில் தொடங்கவுள்ள 2வது கட்ட தகுதிச்சுற்றில் வினேஷ் போகத் 57 கிலோ பிரிவில் பங்கேற்கிறார்.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரீஸ் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார்.

ஆனால், இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் காலையில் எடையிடும் போது, அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி அவர் துரதிர்ஷ்டவசமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அந்தப் பெரிய ஏமாற்றத்திற்குப் பிறகு, தற்போது நீதிமன்றம் அளித்துள்ள இந்த அதிரடி உத்தரவு அவர் மீண்டும் சர்வதேச விளையாட்டு அரங்கில் தடம் பதிக்கப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.