இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியா முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியா, அஜித் அகர்கரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும், அதுவரை அவர்களுக்கு போதிய அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் 15 நாட்கள் என்பது மிகப்பெரிய கால அளவு என்றும், தகுந்த நேரத்தில் புதிய தலைவர் குறித்து முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணியின் முதன்மை தேர்வாளராகப் பொறுப்பேற்ற அஜித் அகர்கர், தனது பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க விருப்பமில்லை என பிசிசிஐ-க்கு ஏற்கனவே முறைப்படி தெரிவித்துவிட்டார். அவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அகர்கரின் பதவிக்காலம் நிறைவடைந்ததும் அக்டோபர் 4-ஆம் தேதிக்குப் பிறகு புதிய தேர்வு வாரியத் தலைவரை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நியமிக்கும். தற்போது அடுத்த முதன்மை தேர்வாளர் ரேஸில் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் பார்த்திவ் படேல் முன்னணியில் இருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பு புதியத் தலைவருக்கே இருக்கும் என்பதால் இந்த நியமனம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.