விளையாட்டு

2026 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தெலுங்கானா நடத்தும் - மத்திய அமைச்சர்

விளையாட்டு வீரர்கள் தங்களின் ஆதர்ச நாயகர்களை அருகில் இருந்து காண முடியும்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, வரவிருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2026-ஐ தெலங்கானா நடத்தும் என்று அறிவித்தார். இப்போட்டிகளின் எட்டாவது பதிப்பு நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இரண்டாவது தென்னிந்திய மாநிலம் தெலங்கானா ஆகும். 2024-ஆம் ஆண்டு பதிப்பைத் தமிழ்நாடு நடத்தியது, கடைசிப் பதிப்பை 2025 மே மாதத்தில் பீகார் நடத்தியது.

அமைச்சர் கருத்து:

"நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முக்கிய தேசிய நிகழ்வுகளை பரப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, மதிப்புமிக்க கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு தெலங்கானாவுக்குக் கிடைப்பது பொருத்தமானது.

குறைந்தது 8000 விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் துணை பணியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்பும் ஆர்வமும் மாநிலத்தில் உள்ளது. இந்த ஆண்டு சில தரமான செயல்பாடுகளை நாம் எதிர்பார்க்கலாம். ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2026 வருகின்றன.

மேலும் நமது விளையாட்டு வீரர்கள் உச்சகட்ட திறமையுடன் இருப்பார்கள். தெலங்கானாவில் நடைபெறும் இந்த போட்டிகள் கொண்டாடுவதற்கு ஒரு நல்ல நேரமாக அமையும், ஏனெனில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் தங்களின் ஆதர்ச நாயகர்களை அருகில் இருந்து காண முடியும்," என்று டாக்டர் மாண்டவியா கூறினார்.

இரண்டாம் இடம்:

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன. போட்டியை நடத்திய பீகார் பதக்கப் பட்டியலில் 15-ஆவது இடத்தையும், தெலங்கானா 13-ஆவது இடத்தையும் பிடித்தன.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில், போட்டியை நடத்திய தமிழ்நாடு மகாராஷ்டிராவிற்குப் பின்னால் இரண்டாம் இடத்தையும், தெலங்கானா 6-ஆவது இடத்தையும் பிடித்தன.