விளையாட்டு

ஆசிய விளையாட்டு: இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

இந்தியர்களின் உணர்வை தங்களுடன் எடுத்து செல்ல விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜப்பானின் நகோயாவில் இந்திய குழுவினரை சந்தித்து, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20-ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு முன்னதாக விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் மன உறுதியை அதிகரித்தார்.

தங்களால் இயன்ற சிறந்ததை வெளிப்படுத்தவும், நம்பிக்கையுடன் இருக்கவும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் உணர்வை தங்களுடன் எடுத்து செல்லவும் அவர் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார்.

வீரர்களுடன் உரையாடல்:

விளையாட்டு வீரர்களுடனான தனது கலந்துரையாடலில் மாண்டவியா, அவர்கள் தங்களுக்காக மட்டும் போட்டியிடவில்லை, மாறாக உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றும், அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை கண்டு ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது என்றும் கூறினார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும் விளையாட்டு வீரர்களுடன் மதிய உணவில் கலந்துகொண்டு, இயல்பான மற்றும் நிம்மதியான சூழலில் அவர்களுடன் நேரம் செலவிட்டார். அவர் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்துகொண்டதோடு, தங்களது இலக்குகளில் கவனம் செலுத்தியவாறே இந்த அனுபவத்தை அனுபவித்து மகிழுமாறும் அவர்களை வலியுறுத்தினார்.

வீரர்களுக்கு வாழ்த்துக்கள்:

களத்தில் இறங்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்தியாவின் நம்பிக்கைகளையும் லட்சியங்களையும் சுமந்து வருகிறார் என்று கூறிய மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர், குழுவினர் அனைவரும் தத்தமது போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்தினார்.

இதற்கிடையில், ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க நாளில், இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றதோடு, மற்றுமொரு பதக்கத்தையும் உறுதி செய்தது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இலவனில் வாலரிவன் வெள்ளிப் பதக்கத்தையும், குழுப் பிரிவில் வாலரிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

மகளிர் 60 கிலோ எடைப் பிரிவு காலிறுதிப் போட்டியில் மங்கோலியாவின் அல்டான்சிமெக் பைகல்மாவைத் தோற்கடித்து, சுசிகா தரியல் தனது பதக்கத்தை உறுதி செய்தார்.

SCROLL FOR NEXT