விளையாட்டு

விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!

"நான் பட்டங்களை வெல்வதற்காக மட்டுமே என் வாழ்க்கையைத் தொடரவில்லை"

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி. சிந்த ஜப்பான் ஓபன் சூப்பர் 750 தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் தோல்விகள், எலும்பு முறிவு காயம் மற்றும் ஃபார்ம் இழப்பு போன்ற கடுமையான சவால்களைச் சந்தித்து வந்த பி.வி.சிந்துவின் இந்த பிரமாண்ட மீட்சிக்குக் காரணம், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் அவர் பேசிய ஒரு தொலைபேசி உரையாடல்தான் என்ற சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சாம்பியன் பட்டம்:

இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை 21-17, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 2024 சையத் மோடி சர்வதேச தொடருக்குப் பிறகு பி.வி.சிந்து கைப்பற்றும் முதல் முக்கியச் சர்வதேச பட்டம் இதுவாகும். தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் சிந்து வெல்லும் முதல் 'சூப்பர் 750' பட்டமும் இதுவே.

விராட் கோலியுடன் பேசிய தொலைபேசி உரையாடல்:

பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்குப் பிறகு ஃபார்ம் இல்லாமல் தவித்த பி.வி. சிந்து, மன அழுத்தத்தில் இருந்தபோது விளையாட்டு உலகத்தில் உச்சத்தைத் தொட்டு, பல விமர்சனங்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டு வந்த விராட் கோலியைத் தொடர்புகொண்டு ஆலோசனைக் கேட்டுள்ளார்.

"நான் பட்டங்களை வெல்வதற்காக மட்டுமே என் வாழ்க்கையைத் தொடரவில்லை. விளையாட்டின் மீதான இயல்பான மகிழ்ச்சியைக் கண்டறியவே விரும்பினேன். மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்த தருணத்தில் விராட் கோலியுடன் உரையாடினேன். உச்சக்கட்ட அழுத்தங்களையும், விமர்சனங்களையும் ஒரு விளையாட்டு வீரராக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர் அளித்த ஆலோசனைகளும் பார்வையும் தான் எனது மனநிலையை முற்றிலும் மாற்றியது".

"நாங்கள் என்ன பேசினோம் என்பது எப்போதும் எங்களுக்குள்ளேயே இருக்கும். ஆனால், எனக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்பட்ட அந்தத் தருணத்தில் அவர் எனக்கு ஆதரவாக நின்றதற்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர் அதிக வார்த்தைகள் பேசவில்லை; ஆனால், அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கும் தத்தாவுக்கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

சில உரையாடல்கள் நாம் உலகத்தைப் பார்க்கும் பார்வையையே முற்றிலும் மாற்றிவிடும்; எங்களுக்கு அந்த உரையாடல் அப்படிப்பட்டதுதான்." நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த உரையாடலின் போது சிந்துவின் கணவர் தத்தாவும் உடனிருந்தார்.

காயத்தில் இருந்து மீண்ட கதை:

கால் எலும்பு முறிவு காயத்திலிருந்து மீண்டு வருவது சிந்துவுக்குப் பெரும் சவாலாக இருந்தது.மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆரம்பக் கட்டத்திலேயே வெளியேறியது சிந்துவுக்குப் பலத்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், கடுமையான உடற்பயிற்சிகள், முறையான வழிகாட்டுதல் மற்றும் சரியான மனநிலையுடன் களம் கண்ட சிந்து, தற்போது ஜப்பான் ஓபன் தொடரைக் கைப்பற்றி தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார்.