ஆசிய விளையாட்டு போட்டிகளில், நீளம் தாண்டுதல் வீராங்கனை ஆன்சி சோஜன் மற்றும் உயர தாண்டுதல் வீரர் சர்வேஷ் குஷாரே ஆகியோர் இந்தியாவின் முதல் தங்கம் வெல்லும் நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
இறுதியில் இருவரும் தலா ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றனர்; இதன் மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா மொத்தம் ஐந்து பதக்கங்களை குவித்தது.
1970-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் பீம் சிங் வெண்கல பதக்கம் வென்ற பிறகு, 56 ஆண்டுகளில் ஓர் இந்தியர் வென்ற முதல் ஆடவர் உயரம் தாண்டுதல் பதக்கத்திற்கு சர்வேஷ் குஷாரே சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இடைவிடாத தூறல் மழையால் பாதிக்கப்பட்ட மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில், டெகாத்லான் வீரர் தேஜஸ்வின் சங்கர், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் வீராங்கனை பருல் சவுத்ரி மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹரிதா பத்ரா ஆகியோர் தலா ஒரு வெண்கல பதக்கத்தை வென்றனர்.
இதன் மூலம் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 13-ஆக (6 வெள்ளி, 7 வெண்கலம்) உயர்ந்தது. போட்டி முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 75 பேர் கொண்ட இந்திய தடகள அணி தனது முதல் தங்க பதக்கத்திற்காக இன்னும் காத்திருக்கிறது.
25 வயதான ஆன்சி, தனது ஐந்தாவது முயற்சியில் 6.53 மீட்டர் தூரம் தாண்டி தனது முதல் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கத்தை வெல்லும் நிலையில் இருந்தார். ஆனால், சீனாவின் ஹுவாங் யிங்யிங் போட்டியின் கடைசி தாவலில் 6.55 மீட்டர் தூரம் தாண்டி தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.
"ஆம், உண்மையில் 2 செ.மீ வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்தது சற்று மனவேதனையை அளிக்கிறது. கடைசி நிமிடம் வரை நான் தங்க பதக்கம் வெல்லும் நிலையில் இருந்தேன். ஆனால் விதி வேறுவிதமாக அமைந்தது. இன்று எனக்குரிய நாளாக அமையவில்லை," என்று ஏமாற்றத்துடன் கூறினார் ஆன்சி. இவர் 6.88 மீட்டர் தூரம் தாண்டிய தேசிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.