விளையாட்டு

டென்னிஸ் வீரர் ஸ்வெரேவை வெகுவாக பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

2026ம் ஆண்டுக்கான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- இத்தாலியின் கொபோலி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் 5 செட்கள் வரை சென்று போராடி ஸ்வெரேவ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 29 வயதான ஸ்வெரேவ் முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னதாக 2025-ல் ஆஸ்திரேலியா ஓபனில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். 2020 அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வயிடைந்தார். இந்த நிலையில்தான் தற்போது முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்வெரேவை சச்சின் தெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வீரர்கள் தொடர்ந்து அளிக்கும் உழைப்பிற்கான பலனைத் தருவதற்கு டென்னிஸ் விளையாட்டு சில சமயங்களில் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளக்கூடும். இன்று பிரெஞ்சு ஓபனில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றதை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஒரு சிறப்பான வீரர் என்று நான் எப்போதும் கருதியிருக்கிறேன்.

இன்று ஃபிளாவியோ கொபோலி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தையும் பாராட்ட வேண்டும். இரு வீரர்களுமே ஆட்டத்தில் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தினர்.

இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.