விளையாட்டு

நேரலையில் சிக்கிய ரியான் பராக் - ராஜஸ்தான் அணி மற்றும் வீரர்கள் மீதும் நடவடிக்கை

ஐபிஎல் தொடரின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தவறு செய்த அணி, அதன் நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மற்ற வழிகளையும் ஆராய்ந்து வருவதாக பிசிசிஐ அறிவிப்பு.

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 40வது லீக் போட்டி நேற்று முன்தினம் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே பிசிஏ மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், ஆடை மாற்றும் அறையில் மின்னணு-சிகரெட் புகைத்த காட்சிகள் நேரலையில் பதிவாகின.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரியான் பராக் போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம். மேலும் நன்னடத்தை கணக்கில் ரியான் பராக்கிற்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தவறு செய்த அணி, அதன் நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மற்ற வழிகளையும் பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது." எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2019-ம் ஆண்டு முதல் மின்னணு-சிகரெட் பயன்பாடு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் விதிகளின்படி மைதானத்தின் உட்பகுதிகளில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்ட செயலாகும்.