விளையாட்டு

துப்பாக்கிச்சுடுதல் வீரரும், பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா மரணம்; பிரதமர் மோடி இரங்கல்

காமன்வெல்த், ஆசிய போட்டியில் இந்தியாவுக்காக 15 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தவர் ஜஸ்பால் ராணா. இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்தியாவின் முன்னணி துப்பாக்கிச்சுடுதல் வீரராக திகழ்ந்தவர் ஜஸ்பால் ராணா. இவர் காமன்வெல்த் கேம்ஸ், ஆசிய போட்டி உள்ளிட்டவைகளில் 9 தங்கம், 4 சில்வர், 2 வெண்கல பதக்கம் வென்றனர். 49 வயதான இவர் துப்பாக்கிச்சுடுதல் வீரர்களுக்கான பயிற்சியாளராகவும் இருந்து வந்தார்.

பிரதமர் மோடி இரங்கல்

இந்த நிலையில் ஜஸ்பால் ராணா, மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது துப்பாக்கிசுடுதல் வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் மோடி, ராணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ‘‘ஜஸ்பால் ராணாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு இந்திய விளையாட்டு உலகிற்கு ஒரு பேரிழப்பாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மான்சுக் மாண்டவியா

இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா ‘‘இந்திய துப்பாக்கிச்சுடுதல் ஜாம்பவான் ராணாவின் மறைவு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள், ஒரு உத்வேகம் அளிக்கும் மரபை விட்டுச் சென்றுள்ளன. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டுச் சமூகம் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, ககன் நரங், விஜய் குமார் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT