விளையாட்டு

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

8 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் 14-வது நார்வே செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மொத்தம் 10 சுற்றுகள் கொண்டது.

இதன் 8-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேயின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

இந்திய இளம் வீரரான பிரக்ஞானந்தா கருப்பு காய்களுடன் அபாரமாக விளையாடி கார்ல்சனை தோற் டித்தார்.

கடந்த 27-ம் தேதி நடந்த 3-வது சுற்றிலும் அவர் கார்ல்சனை தோற்கடித்து இருந்தார். இதன்மூலம் ஒரே செஸ் தொடரில் கார்ல்சனை 2 முறை தோற்கடித்து 19 ஆண்டுகால சாதனையை பிரக்ஞானந்தா சமன் செய்தார்.

8 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்லி சோ 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பிரான்சை சேர்ந்த அலி ரெஜா 13 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான இந்தியச் சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் நீண்ட கால சாதனைப் பட்டியலை பிரக்ஞானந்தா தற்போது சமன் செய்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற லினாரஸ் சர்வதேச செஸ் தொடரில், கார்ல்சனை இரண்டு முறை ஆனந்த் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.