சிந்து  
விளையாட்டு

சீனா ஓபன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி - பழிதீர்த்கொண்ட சீன வீராங்கனை

சிந்துவை 16-21, 22-20, 21-18 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார்.

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இன்று நடந்த ஒரு விறுவிறுப்பான போட்டியில், உலகின் நான்காம் நிலை வீராங்கனையும் சீன நட்சத்திரமுமான சென் யுபெய், சிந்துவை 16-21, 22-20, 21-18 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார்.

ஆட்டம்

ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், இருவரும் இறுதிவரை கடுமையாகப் போராடினர்.

முதல் சுற்றில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றிலும் சிந்து முன்னிலையில் இருந்தார். அவருக்கு 4 மேட்ச் பாயிண்டுகள் கிடைத்தும், அதை அவரால் புள்ளியாக மாற்ற முடியாமல் போனது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட யுபெய், இரண்டாவது ஆட்டத்தை வென்று, போட்டியை மூன்றாவது ஆட்டத்திற்குக் கொண்டு சென்றார்.

மூன்றாவது ஆட்டத்திலும் இரு வீராங்கனைகளும் கடுமையாகப் போராடிய போதிலும், இறுதியில் யுபெய் தேவையான புள்ளிகளைப் பெற்று வென்றார்.

இதன் மூலம், கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபன் அரையிறுதியில் சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு யுபெய் பழி தீர்த்துக்கொண்டார்.

இந்தத் தோல்வியுடன், சீனா ஓபனில் சிந்துவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

சமீபத்தில் ஜப்பான் ஓபன் பட்டத்தை சிந்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் ஓபன் சாம்பியன்

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் யுபெய்யை வீழ்த்தி ஜப்பான் ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் பி.வி.சிந்து.

இறுதிப்போட்டியில் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 2 ஆண்டாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லாத நிலையில், தற்போது ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பி.வி.சிந்து கடந்த 2024ம் ஆண்டில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.