இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, 2026 சிங்பீல்ட் கோப்பை போட்டியில் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளார்.
கோப்பை தொடரின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் கிராண்ட்மாஸ்டர் வின்சன்ட் கீமர் உடன் விளையாடிய பிரக்ஞானந்தா, மூன்றாவது சுற்றில் செக்மேட் ஆனார்.
இதன் மூலம் மூன்று சுற்றுகளையும் சேர்த்து பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகளை தன்வசம் வைத்துள்ளார். இன்னும் 6 சுற்றுகள் மிச்சம் உள்ளன. தற்போது தொடரில் 4ஆம் இடத்தில் அவர் உள்ளார்.
கீமர், பாபியானோ கரவ்னா, சாம் சீவன் ஆகியோரும் அவருடன் நான்காம் இடத்தில் உள்ளனர்.
இதே மூன்றாம் சுற்றில் வீஸ்லி சோ, பாபியானோ கரவ்னாவை தோற்கடித்தன் மூலம் மொத்தம் 2.5 புள்ளிகளுடன் தொடரில் முதலிடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து தலா இரண்டு புள்ளிகளுடன் லெவான் அரோனியன் மற்றும் வாசியர் லாக்ரேவ் அடுத்த இடத்தில் உள்ளனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 7 அன்று செயின்ட் லூயிஸ் ராபிட் - பிளிட்ஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்ற நிலையில் தற்போதைய தோல்வி வந்துள்ளது.
சிங்பீல்டு கோப்பையை நேர்மறையாக தொடங்கிய பிரக்ஞானந்தா, முதல் சுற்றில் அமெரிக்க கிராண்மாஸ்டர் சாமுவேல் சீவன் உடனான போட்டியை டிரா செய்தார்.
இரண்டாம் சுற்றில் உலக சாம்பியன் ஜெவோகிர் சின்டாரோவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
மூன்றாம் சுற்றில் அவர் தோல்வியுற்ற நிலையில் மீதமுள்ள 6 சுற்றுகளில் அவர் தன் புள்ளிகளை உயர்த்தி சிங்பீல்டு கோப்பையில் முதலிடம் பிடித்தால், அவருக்கு 475,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.