கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், போகோ ஸ்டிக்கில் குதித்துக்கொண்டே 211 ரூபிக்ஸ் கியூப்களை துல்லியமாகச் சேர்த்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அவரது நீண்ட நாள் கனவான கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் சாதனை தற்போது நனவாகியுள்ளது.
அனாபோலிஸ் ராயல் பகுதியைச் சேர்ந்த சவுல் ஹாஃப்டிங் என்ற இந்த இளைஞர், தனது 16 வயதிலேயே (2021-ம் ஆண்டு) இந்த விசித்திரமான உலக சாதனையை மேற்கொள்ள முயன்றார்.
இதற்கு முன்னதாக போகோ ஸ்டிக்கில் குதித்தபடியே 65 ரூபிக்ஸ் கியூப்களைச் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. ஆனால், சவுல் ஹாஃப்டிங் அந்த சாதனையைத் தகர்த்து, 211 ரூபிக்ஸ் கியூப்களைச் சேர்த்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார்.
இவரது இந்த சாதனை கடந்த 2022-ம் ஆண்டே கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இது பதிவேற்றப்பட்டது.
இருப்பினும், ஆண்டுதோறும் அச்சிடப்படும் உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை அப்போது இடம்பெறவில்லை. "என்னுடைய இந்த சாதனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
ஒருவேளை யாராவது இதை முறியடித்தாலும், பல ஆண்டுகளாக இந்த சாதனை என் வசம் இருந்தது எனக்குப் பெருமையே" என்று சவுல் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கின்னஸ் நிர்வாகத்திடம் இருந்து சவுலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், தற்போது கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள 'கின்னஸ் உலக சாதனைகள் 2027' புத்தகத்தில் அவரது சாதனை பிரத்யேகமாக அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுல் ஹாஃப்டிங் கூறும்போது, "இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். புத்தகத்தில் என் பெயரைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
என்னுடைய இந்த சாதனை மிகவும் தனித்துவமானது மற்றும் பார்ப்பதற்கே ஒரு சுவாரசியமான காட்சியாக இருக்கும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்கான ஊடகப் பயணங்களிலும் அவர் தற்போது பங்கேற்க உள்ளார்.