விளையாட்டு

பதக்கம் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல, அது புதிய இந்தியாவின் வலிமையான பிம்பம்: பிரதமர் மோடி

ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 85 பதக்கங்கள் பெற்று நான்காவது இடம் பிடித்தது.

ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

ஜப்பானில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்கள் பெற்று நான்காவது இடம் பிடித்தது.

வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

வில்வித்தை, மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்டவற்றில் பதக்கங்கள் கிடைத்தன. பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். அவர்களுடன் கலந்துரையாடி, கவுரவித்த பிரதமர் மோடி, அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

44 ஆண்டுக்கு பிறகு பெண்கள் ஹாக்கியில் தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி எப்போதும் நமது நினைவில் இருக்கும். 44 ஆண்டுக்கு பிறகு ஹாக்கியில் நமது பெண்கள் அணி தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது.

கிரிக்கெட்டில் ஆண்கள், பெண்கள் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை பதக்கம் வென்று சாதனை படைத்தது. கபடியிலும் இரு அணிகளும் தங்கம் வென்றது.

வில்வித்தையில் இந்தியாவுக்கு 5 தங்கம் கிடைத்தது. நமது தடகள வீரர்கள் புதிய சாதனை படைத்தனர். 28 ஆண்டுக்கு பிறகு பளு தூக்குதலில் நமக்கு பதக்கம் கிடைத்தது. 1982க்கு பிறகு மாரத்தானில் இந்தியா சாதனை படைத்தது.

பெண்கள் பெற்ற 38 பதக்கம்

நமது மகள்களை பாராட்ட விரும்புகிறேன். இந்தியாவுக்கு கிடைத்த 85 பதக்கங்களில் 38 பதக்கங்களை பெண்கள் பெற்றுக் கொடுத்தனர். அதில் 11 தங்கம். இந்த பதக்கம் என்பது வெறும் எண்ணிக்கை கிடையாது. அது புதிய இந்தியாவின் வலிமையான பிம்பத்தை காட்டுகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா தனது விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு சூழலுக்கும் ஆதரவு அளிக்க மிகுந்த பொறுமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

கேலோ இந்தியா திட்டத்தையும், விளையாட்டு கூட்டமைப்பை வலுப்படுத்தவும் 36 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT