18 வயதுக்கு உட்பட்டோருக்கான (U-18) ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை இந்திய அணி எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்திற்குள் இந்திய அணி 4 கோல்களை அடித்து அசத்தியது. ஆஷிஷ் தானி புர்தி 2, 28, 34-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்தார். கேப்டன் கேதன் குஷ்வாஹா 30-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் போராடிய ஜப்பான் அணி 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது.
இறுதியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா இந்தப் பட்டத்தை வெல்வது 3-வது முறையாகும். இதற்குமுன் 2001, 2016-ஆம் ஆண்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற ஆண்கள் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
நமது இளம் ஹாக்கி வீரர்களின் ஒரு அற்புதமான சாதனை. 2026-ம் ஆண்டுக்கான 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் 18 வயதுக்கு உட்பட்ட ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்.
இந்த அணி போட்டி முழுவதும் அபாரமான திறமையையும் குழுப்பணியையும் வெளிப்படுத்தி இறுதிப் போட்டியில் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி இந்திய ஹாக்கிக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.
இந்த வெற்றி நமது இளைஞர்களிடையே ஹாக்கியின் வளர்ந்து வரும் பிரபலத்தையும் பிரதிபலிக்கிறது. அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.