விளையாட்டு

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?

பெண்களுக்கான பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டே நடத்துவது குறித்து யோசித்தோம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி தொடங்குகிறது.

முதற்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்திலும் (ஆக.4-15), நாக்-அவுட் உள்பட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்திலும் (ஆக.18-28) நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான கோப்பை அறிமுக விழா சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ், செயலாளர் பக்வன்தாஸ் ராவ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,"20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் பேட்டர்களுக்கு சாதகமான ஆட்டமாக மாறிவிட்டது. எனவே அதிக ரன்கள் குவிக்கும் வகையிலான ஆட்டங்களை காணும் வகையில், இந்த ஆண்டு பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளங்கள் அமைப்பதை உறுதி செய்வோம்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெண்கள் கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்வதில் உறுதியாக இருக்கிறது. பெண்களுக்கான பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டே நடத்துவது குறித்து யோசித்தோம்.

ஆனால் அதற்கு நிறைய திறமை கொண்ட வீராங்கனைகள் தேவை. அதற்கு முன்னோட்டமாகத் தான் இந்த ஆண்டு டி.என்.பி.எல். போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு நிச்சயம் பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியை நடத்த முயற்சிப்போம். தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.

சென்னை அல்லது கோவை எங்கு வேண்டும் மென்றாலும் கொண்டு வரலாம். ஆனால் அந்த திட்டம் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை' என்றனர்.