பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனுடைய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன் ஆட்டத்தின் முடிவில், இந்திய வீரர், வீராங்கனைகள் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தமாக 114 பதக்கங்களை வென்று அசத்தினர்.
இந்தத் தொடரில், இந்திய தடகள வீரரான நீரஜ் யாதவ் (42) பங்கேற்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வியடைந்தார். இதனால், இம்முறை நீரஜ் யாதவால் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், நீரஜ் யாதவுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காததால், கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீரஜ் யாதவ், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவலை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.