சீனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் வீரர் ஒருவர் தப்பித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் GT சாம்பியன்ஷிப் ரேஸ் என்ற பெயரில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பெர்ராரி நிறுவனம் சார்பில் ஒல்லி மில்ராய் கலந்து கொண்டார். இவருடன் பலர் கலந்து கொண்டனர். கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன. அப்போது சில கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
அப்போது மில்ராய் ஓட்டிய பெர்ராரி கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மில்ராயால் காரில் இருந்து வெளியேற முடியவில்லை. இதை கவனித்த நெதர்லாந்தைச் சேர்ந்த லோக் ஹார்டோக், தனது காரை நிறுத்தி விட்டு, மில்ரோய் இருந்து கார் நோக்கி ஓடினார்.
காரின் பின்பக்கமாக இருந்த சில பாகங்களை கழற்றி மில்ராயை வெளியே இழுத்து கொண்டு வந்தார். பின்னர், தீயணைக்கும் கருவியை கொண்டு தீயை அணைக்க முயன்றார்.
ஹார்டோக்கின் துணிச்சலான இந்த செயலால், மில்ரோய் பிழைத்துக் கொண்டார். இது தொடர்பான மில்ராய் கூறுகையில் "இன்று இரவு வரை (சமூக வலைத்தளத்தில் செய்தி பதிவிடும் நேரம்) நான் உயிரோடு இருக்கிறேன் என்றால், அது ஒட்டுமொத்தமாக நன்றி ஒருவருக்குத்தான்.
போட்டியின்போது கொடி காட்டும் பணியாளர்களோ அல்லது தீயணைப்புக் குழுவினரோ கண்ணில் தென்படாத நிலையில், லோக் ஹார்டோக் (Loek Hartog) உடனடியாக வண்டியை நிறுத்தினார். மேலும், என்னைக் காரிலிருந்து வெளியேற்றுவதற்காகத் தனது சொந்த உயிரையும் பணயம் வைத்தார்" என்றார்.