விளையாட்டு

வெறும் பேட்டிங் சாதனை மட்டுமல்ல: விராட் கோலியின் டாட்டூக்கள் சொல்லும் சுவாரஸ்ய கதைகள்!

கோலி தனது ஆரம்ப காலத்தில் வலது முன்கையில் பழங்குடியின கலை வடிவிலான டாட்டூவை முதன்முதலில் வரைந்துகொண்டார்.

ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டின் அடையாளத்தை சுமப்பதைப் பெருமையாகக் கருதும் கோலி, தனது உடம்பில் இரண்டு சிறப்பு எண்களைப் பொறித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச அரங்கில் தனது பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். மைதானத்தில் அவர் வெளிப்படுத்தும் அக்ரசிவ் ஆட்டம், உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டங்கள் மற்றும் துடிப்பான அணுகுமுறை போன்றவை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தவை. இருப்பினும், விளையாட்டுத் திறனையும் தாண்டி, இந்தியக் விளையாட்டு வீரர்களிடையே டாட்டூ கலாச்சாரத்தை ஒரு புதிய அலையாக மாற்றிய பெருமை கோலியையே சேரும்.

அவரது உடலில் வரையப்பட்டுள்ள ஒவ்வொரு டாட்டூவும் வெறும் அழகுக்காக மட்டும் செய்யப்பட்டவை அல்ல; மாறாக, அவரது வாழ்க்கைப் பயணம், ஆன்மீகக் தேடல் மற்றும் தொழில்முறை வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களின் அடையாளங்களாக விளங்குகின்றன.

தொடக்க கால பாதை

கோலி தனது ஆரம்ப காலத்தில் வலது முன்கையில் பழங்குடியின கலை வடிவிலான டாட்டூவை முதன்முதலில் வரைந்துகொண்டார். தொடக்கத்தில் இது ஸ்டைலுக்காகத் தொடங்கப்பட்டாலும், பின்னர் தனது இயல்பான ஆக்ரோஷத்தையும் தனித்துவ அடையாளத்தையும் வெளிப்படுத்தும் குறியீடாக இதை அவர் ஏற்றுக்கொண்டார். இதனுடன், தனது பெற்றோர் சரோஜ் மற்றும் பிரேம் ஆகியோரின் பெயர்களை இந்தியில் தனது கையில் வரைந்துள்ளார். கிரிக்கெட் வீரராக தான் உருவெடுக்க அடித்தளமிட்ட பெற்றோரின் தியாகங்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த டாட்டூக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆன்மீக குறியீடுகள்

ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டின் அடையாளத்தை சுமப்பதைப் பெருமையாகக் கருதும் கோலி, தனது உடம்பில் இரண்டு சிறப்பு எண்களைப் பொறித்துள்ளார். 2008-இல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் 175-வது வீரராக அறிமுகமானதைக் குறிக்கும் '175' என்ற எண்ணும், 2011-இல் டெஸ்ட் போட்டிகளில் 269-வது வீரராகக் களம் கண்டதைக் குறிக்கும் '269' என்ற எண்ணும் அவரது கையில் இடம்பெற்றுள்ளன. மேலும், இடது கையில் கைலாச மலையில் தியானத்தில் இருக்கும் சிவபெருமானின் வடிவம், மன அமைதியையும் அகந்தையை அழித்து சுய முன்னேற்றத்தை அடைவதையும் குறிக்கிறது. இதன் அருகில் உள்ள ஆசிரமம் மற்றும் 'ஓம்' குறியீடு ஆகியவை தொடர் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மன அமைதியைப் பேண அவருக்கு உதவுகின்றன.

போராளித் தன்மை

ஜப்பானிய சாமுராய் வீரரின் டாட்டூ, சாமுராய்களின் 'புஷிடோ' கொள்கைகளான நேர்மை, ஒழுக்கம், மரியாதை மற்றும் தைரியம் ஆகியவற்றை குறிப்பதாக கோலி தெரிவித்துள்ளார். அதேபோல, தோள்பட்டையில் உள்ள 'கடவுளின் கண்' டாட்டூ, தனக்கு மேலே ஒரு உயர்ந்த சக்தி இருப்பதை உணர்த்தி எப்போதும் பணிவோடு இருக்க நினைவூட்டுகிறது.

அண்மைக்காலத்தில் வரைந்துகொண்ட தாமரை மலர் மற்றும் புனித வடிவியல் டாட்டூக்கள், சவால்களில் இருந்து மீண்டு வரும் மன உறுதியையும், மறுபிறப்பையும், ஆன்மீக முதிர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு, விராட் கோலியின் உடலில் இருக்கும் கலைப் படைப்புகள் அவரது விளையாட்டு வாழ்க்கையின் மைல்கற்களையும், ஒரு மனிதனாக அவர் அடைந்துள்ள மனமாற்றத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சுயசரிதையாகவே அமைந்துள்ளன.

SCROLL FOR NEXT