விளையாட்டு

நார்வே செஸ் தொடர்: 7வது சுற்றில் இந்திய வீரர்கள் அசத்தல் - தொடரில் வெல்ல வாய்ப்பு

பிரக்ஞானந்தா, தொடரில் மொத்தம் 9 புள்ளிகளுடன் உள்ளார்.

சர்வதேச நார்வே செஸ் தொடரின் 7வது சுற்றில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்களான டி. குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா , மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக் அபார வெற்றி பெற்றனர்.

உலக சாம்பியனான குகேஷ் ஓபன் பிரிவுவில் அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் வெஸ்லி சோவை எதிர்கொண்டார்.

ஆட்டம் டிராவில் முடிய டை பிரேக் ஆட்டத்தில் குகேஷ் வெஸ்லி சோவை வீழ்த்தி 1.5 புள்ளிகள் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் மொத்தம் 8 புள்ளிகளுடன் தொடரில் நீடிக்கிறார்.

மற்றொரு விறுவிறுப்பான ஓபன் பிரிவு ஆட்டத்தில் இளம் நட்சத்திரம் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் நாட்டின் அலிரேசா பிரோஸ்ஜாவை வீழ்த்தி 3 புள்ளிகளை அள்ளினார். தற்போது பிரக்ஞானந்தா, தொடரில் மொத்தம் 9 புள்ளிகளுடன் உள்ளார்.

புள்ளிப்பட்டியல்:

தொடரின் ஓபன் பிரிவில் 12.5 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி சோ தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அலிரேசா 10 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் மற்றும் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் ஆகியோர் 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குகேஷ் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்தாலும், இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ளதால் சாம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பு அனைத்து வீரர்களுக்கும் சமமாக உள்ளது.

மகளிர் பிரிவு

இதனிடையே மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பியை எதிர்கொண்டார். ஆட்டம் டிராவில் முடிய, டை பிரேக் முறை வந்தபோது திவ்யா தேஷ்முக் அதிரடியாக ஆடி கோனேரு ஹம்பியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 10 புள்ளிகளுடன் திவ்யா தேஷ்முக் தொடரில் நீடிக்கிறார். தொடரின் மகளிர்

பிரிவில், 12.5 புள்ளிகளுடன் கஜகஸ்தானின் பிபிசாரா அசாபாயேவா முதலிடத்தில் உள்ளார்.